Tuesday, August 23, 2011

ஸ்பெயினில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகள் - 1.5 மில்லியன் இளைஞர்கள் பங்கேற்பு

நேற்று முன் தினம் ஆகஸ்ட் 21ம் திகதி 26 வது உலக இளையோர் தினம் கொண்டாடப்படட்து.

இதனை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மட்ரிட்டில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகளில், பரிசுத்த பாப்பரசர் 16ம் பெனடிக்ட் கலந்து கொண்டார்.

சுமார் 190 நாடுகளிலிருந்து 1.5 மில்லியன் இளைஞர்கள் இந்நிகழ்வுக்காக மாட்ரிட்டில் கூடினர். ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இவ்விழாக்களின் போது பிரியாவிடை பெற்றுகொண்ட பரிசுத்த பாப்பரசர் வத்திகானுப்புக்கு புறப்படுவதற்கு முன்னர் மேட்ரிட் பரஹால் விமான நிலையத்தில் பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது தன்னை வழியனுப்ப வந்திருந்த ஸ்பெயின் அரசர் ஹுவான் கார்லோஸ் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.

'ஸ்பெயின் தனது ஆழமான சமய மற்றும் கத்தோலிக்க உணர்வை கைவிட்டு விடாமல், தனது மதிப்புமிக்க, பன்மைத்தன்மை கலந்த மற்றும் திறந்த மனம் கொண்ட பண்புகளில் முன்னோக்கி செல்லும் திறமையை கொண்டிருக்கிறது.

ஸ்பானிய சமுதாயம், உலக இளையோர் தினத்தை நடத்தியதைப் பார்க்கும் பொழுது, இளையோர் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் இன்னும் ஆழமாக வேரூன்ற அது உதவ முடியும் என்பதை எடுத்துக் காட்டியது என தெரிவித்தார். எனினும், திருமுழுக்குப் பெற்ற பெரும்பாலான குடிமக்களைக் கொண்டுள்ள இஸ்பெயின் நாட்டின் பொதுவான கொள்கைகளில் கத்தோலிக்க விசுவாசம் குறைந்த அளவே எதிரொலிக்கின்றது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.


இந்த நாட்களை இத்தனை ஆர்வத்துடனும், அருளுடனும் கொண்டாட எனக்கு உதவிய நம் ஆண்டவருக்கு நன்றி சொல்லும் இதயத்தோடு ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன் என மேலும் தெரிவித்தார்.

அவர் விமானநிலையத்திற்குப் புறப்படு முன்னர், இந்த 26வது உலக இளையோர் தினத்தில் தன்னார்வப் பணி செய்த பல நாடுகளின் 12 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.

மட்ரிட் பரஹாஸ் சர்வதேச விமானநிலையத்திற்கும் பல இளையோர் இஸ்பானியக் கொடிகளுடன் வந்து திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.

அடுத்த உலக இளையோர் தினம் பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment